"இந்த 717 மட்டும் போதாது.." - முதல்வர் விஜய்யை வரவேற்று அன்புமணி ராமதாஸ் வைத்த முக்கிய கோரிக்கை..!!

 
anbumani

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முழுமதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலம் என்ற உன்னத இலக்கை நோக்கிய தமிழ்நாட்டின் பயணத்திற்கு நம்பிக்கையளிக்கும் தொடக்கமாக இது அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் விவாதித்த விஜய் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை மூட ஆணையிட்டதாகவும், அடுத்த இரு வாரங்களில் இந்த கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 4765-லிருந்து 4048 ஆக குறையும். உண்மையாகவே இது மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை தான்.

ஒரு மாணவன் பள்ளிக்கு செல்ல ஒன்று முதல் 2 கி.மீ பயணிக்க நேரிடும் போது, குறைந்தது இரு மதுக்கடைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மாணவர்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் மது கிடைப்பது தான் அவர்கள் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இதைத் தடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கும், சட்டம்-ஒழுங்கை நிலை நிறுத்தவும் இந்த துணிச்சலான நடவடிக்கை பயனளிக்கும். இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சமூகநீதி வழங்க முடியும்.

அதே நேரத்தில் தமிழகத்தின் மூலை முடுக்குகள் வரை பரவியுள்ள மது வணிகக் கட்டமைப்பை தகர்க்க இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதல்ல. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 4765 மதுக்கடைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்பட்டாலும், அவற்றைக் கடந்து மாநிலம் முழுவதும் சந்துக்கடைகள் என்ற பெயரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் 1500-க்கும் மேற்பட்ட மது குடிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருவர் நினைத்தால் அடுத்த 2 நிமிடங்களில் மதுவை வாங்கி குடிக்க இந்த கட்டமைப்பு தான் காரணமாக உள்ளது. சந்துக் கடைகளும், மனமகிழ் மன்றங்களும் மூடப்படாவிட்டால், எந்த நோக்கத்திற்காக 717 மதுக் கடைகளை மூட முதல்-அமைச்சர் ஆணையிட்டாரோ, அந்த நோக்கத்தை அடைய முடியாது என்பது திண்ணம்.

மது மற்றும் போதையில்லாத தமிழ்நாடு அமைக்கப்பட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்க முடியாது. அந்த இலக்கை நோக்கி முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பயணிக்க வேண்டும். அதற்கான அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.