இது திராவிட மாடல் அல்ல; ஃபிராடு மாடல்..! - அண்ணாமலை ஆவேச பேச்சு..!
இதில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், அமமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, '' நமது முதலமைச்சர் வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் இருக்கிறார். அதே போல் நமது கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் இருக்கிறார்கள். பாஜக மட்டுமே இந்த மாதம் முடிவதற்குள் 22,000 தெருமுனை பிரச்சார கூட்டத்தை நடத்தி முடித்திருக்கும்.
துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பெயருக்கு மட்டுமே விஐபி தொகுதியாக உள்ளது. ''சென்னை நமது கோட்டை, திமுக சின்னத்தில் போட்டியிட்டால் மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள்'' என்ற இறுமாப்பும் எகத்தாளமும் திமுகவுக்கு இருக்கிறது. ஆனால், சென்னை மக்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திமுகவிற்கு சம்மட்டை அடி கொடுத்து வருகிறார்கள்.
நான்கரை லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் போடக்கூடிய ஒரு மாநிலத்தின் தலைநகருக்கான அந்தஸ்தோடு இவர்கள் சென்னையை வழிநடத்துக்கிறார்களா? என்றால் கிடையாது. மழை காலங்களில் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஃபோட்டோ ஷூட் நடத்துவதற்கு மட்டுமே வீதிக்கு வருகிறார்கள்.
இரண்டு லட்சம் மீனவர்களுக்கு வீடு கட்டி தருவதாக 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். சேப்பாக்கம் தொகுதியில் 25,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மீன்பிடித் தொழிலாளர்கள். அவர்களிடம் திமுக உங்களுக்கு வீடு கட்டி கொடுத்து இருக்கிறதா? என்று கேட்டால் ஒருவர் இருவர் கூட கை தூக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் பட்டி தொட்டியெலாம் பரவி கிடக்கிறது. கஞ்சா புழக்கத்தின் தலைநகராக சேப்பாக்கம் பகுதி மாறி இருக்கிறது. சென்னையில் சில இடங்களுக்கு செல்வதற்கே பயமாக இருக்கிறது என்று நடிகை ரேவதி சொல்கிறார். அதற்கு அவரை திமுக ஐடி விங்க் ஆபாசமாக தாக்கிக் கொண்டிருக்கிறது. 2021 இல் இருந்து 2025 வரை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் 8 விழுக்காடு உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு தலைநகரமும் முன்னேறி கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசிடம் வம்பிழுப்பதாக கூறி சென்னையின் வளர்ச்சியை இந்த அரசு தடுக்கிறது.
என்ஜினியருக்கு கொடுக்க வேண்டிய வேலையை புரோக்கர்களை வைத்து முடிவு செய்கிறார்கள். கமிஷன் பெற்று 1,020 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதற்கு 360 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். இவ்வளவு ஊழலை செய்துவிட்டு பொதுவெளிக்கு வருவதற்கே முதல்வர் வெட்கப்பட வேண்டும். தமிழக அரசு வரலாற்றிலேயே குரூப் 2 தேர்வை ரத்து செய்திருப்பது இந்த திமுக அரசு மட்டும்தான்.
இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால் இன்னும் 5 ஆண்டுகளில் இளைஞர்கள் தமிழ்நாட்டில் வாழ முடியாத நிலை ஏற்படும். ஒரு குடும்பை அட்டையின் மீது 4 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் கடனாக உயர்த்தி இருக்கிறார்கள். இதை திராவிட மாடல் அரசு என்று சொல்வதா? அல்லது ஃபிராடு மாடல் அரசு என்று சொல்வதா?'' என பேசினார்.

