இந்த விஜய் களத்திற்கு வருவது புதுசு இல்ல கண்ணா - 14 ஆண்டுக்கு முன்பே..’’ தவெக தலைவர் விஜய்..!
நாகை பிரசாரத்திற்காக இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து நாகை மற்றும் திருவாரூரில் சாலை மார்கமாக சென்று பிரசாரம் செய்வதற்காக தனது பிரசார வாகனத்தில் புறப்பட்டார். இந்த சூழலில் வாஞ்சி ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் தவெக தொண்டர்கள் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்திருந்தனர்.
தவெக தலைவர் விஜய், நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தூர் பகுதியில் இன்று (செப். 20) மதியம் தொடங்கினார். அங்கே அவர் பேசி வருவதாவது:
இந்த விஜய் களத்திற்கு வருவது புதுசு இல்ல கண்ணா, 2011-ல் பிப்ரவரி 22ஆம் தேதி மீனவ நண்பர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து, இதே மண்ணில் பொதுக்கூட்டத்தை நடத்தினோம். முன்பு விஜய் மக்கள் இயக்கமாக வந்தோம். இப்போது தமிழக வெற்றிக் கழகமாக வந்திருக்கிறோம். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் போதும்.
நான் என்றும் மீனவ மக்களின் நண்பன். மக்களோடு மக்களாக நிற்பவன். தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவது எப்போது நிற்கும்? நம் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்கள் நலன் எப்போது காக்கப்படும்? மீனவர் பிரச்சினைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு, கடந்துபோகிறது திமுக அரசு.
சிஎம் சார் வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? தமிழ்நாட்டுக்கு முதலீடா? தமிழ்நாட்டில் இருந்து முதலீடா?
கடந்த வாரம் பிரசாரத்தின்போது பெரம்பலூர் செல்ல வேண்டியது. ஆனால், செல்ல முடியாமல், போனது. இந்த நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாம் இந்த பிரசார திட்டத்தைப் போட்ட பிறகு, அது என்னப்பா சனிக்கிழமை, சனிக்கிழமை என கேள்வி எழுந்தது. அது ஒன்றும் இல்லை. உங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக் கூடாது, உங்களது எந்த வேலைக்கும் தொந்தரவு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் திட்டமிடப்பட்டது.
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.


