இந்த ஆண்டில் மட்டும் 17 முறை.. தமிழக மீனவர்களை உடனே விடுவிக்கனும் - மத்திய அமைச்சருக்கு லெட்டர் போட்ட ஸ்டாலின்..!!

 
mk stalin write a letter to jaishankar about fishermen arrest mk stalin write a letter to jaishankar about fishermen arrest


இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன் பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நேற்று (06.08.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு நேற்று (06.08.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் 06.08.2025 அன்று அதிகாலை 14 இந்திய மீனவர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டதை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் தனி கவனத்திற்குக் கொண்டு வருவதாக முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

External Affairs Minister Jaishankar

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், 2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17-வது சம்பவம் என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

தற்போது, 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதாகவும், மீனவர்கள், அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளதை தனது கடிதத்தில் வேதனையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.”