‘இங்கே வந்தவர்களுக்குத் தான் எம்.எல்.ஏ சீட்..’ - ராமதாஸ் திட்டவட்டம்..

 
ramadoss ramadoss

பாமகவில் தனக்கே அதிகாரம் இருப்பதாகவும், தன்னை சந்தித்து பொறுப்பு வாங்கிய நிர்வாகிகளே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பாமகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் நாள்தோறும்  அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகிவிட்டது.  பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே  நிலவும் மோதலின் அடுத்த கட்டமாக , தமிழகம் முழுவதும் உள்ள அன்புமணியின்  ஆதரவாளர்களை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்தார் ராமதாஸ். அத்துடன் தன் மூச்சு உள்ளவரை தானே பாமகவின் தலைவர் என்றும் ,  நான் நியமனம் செய்யும் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பதவியே செல்லும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று (ஜூன் 25) திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன்  ஆலோசனை மேற்கொண்டார்.  

Anbumani Ramadoss

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸிடம்,  பாமகவில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்த நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.   அதற்கு  பதிலளித்த அவர், “எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு இருக்கத்தான் செய்யும்.  அப்படியாக ஒரு தீர்வு வரும். பாமகவை தொடர்ந்து 46 ஆண்டு காலமாக கட்சி, சங்கம் இரண்டையும் வழிநடத்தி வருகிறேன். சங்கத்தின் தலைவராக பூ.அருள்மொழியும்,   கட்சியின் தலைவராக நானும் இருக்கிறேன்.

மேலும் 34 துணை அமைப்புகளை உருவாக்கியுள்ளேன். அதற்கெல்லாம் அவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறேன். இந்த 34 அமைப்புகளும் திறம்பட செயல்பட இனி அவர்களை முடித்துவிட்டு உற்சாகப்படுத்தி அவர்களுடைய பணியை தொடரச் செய்ய வேகமாக அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கப் போகிறோம். அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப்போகிறோம்.  இங்கே வந்துள்ள மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மாநில பொறுப்புகள் எல்லோருக்கும், இங்கே வந்துள்ளவர்களுக்குதான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும்.

ramadoss

கூட்டணியை பற்றி இப்போது உங்களுக்கு சொல்லக்கூடாது. கூட்டணி முடிவாகிவிட்டதா என கேட்பீர்கள். ஆனால் கூட்டணி முடிவாகவில்லை. நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறுகின்ற கூட்டணியாக இருக்கும். இங்கு வந்துள்ளவர்கள் தான் தேர்தலில் போட்டியிட நான் தேர்ந்தெடுப்பேன். இங்கு வந்துள்ளவர்கள்தான் எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்கள். ஏனென்றால் எனக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு. அதனால் தான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நல்ல நல்லவர்களை, வல்லவர்களை சட்டமன்ற உறுப்பினராக ஆக்குவேன்” என்று தெரிவித்தார்.