செவாலியே விருது பெற்றார் தோட்டா தரணி
கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருது வழங்கப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரான்ஸ் கலாச்சார மையத்தில்,கலை இயக்குநர் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டது. இதனை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ சென்னை மற்றும் புதுச்சேரி பிரான்ஸ் துணைத் தூதர் எத்தியென் ரோலான்-பியெக், ஆகியோர் கலந்து கொண்டு தோட்டாதரணிக்கு செவாலியே விருது வழங்கினார்கள். கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, இவ்விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கலை இயக்குநர் தோட்டா தரணி, கௌரவமான விருது. இது தமிழ்நாட்டுக்கே பெருமை. புதிய தலைமுறைகள் இந்த கலைத்துறையில் வருகிறார்கள். அவர்களுக்கும் இந்த விருது ஒரு ஊக்கமாக இருக்கும். கஷ்டப்பட்டு வேலை செய்தால் எல்லாமே வெற்றியில் தான் முடியும், கஷ்டப்படாமல் யாரும் வரவில்லை, அதனால் கஷ்டப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம் அதுதான் என்னுடைய தியரி. புதிய இயக்குனர்கள் மூத்த இயக்குனர்கள் என அனைவரிடமும் வேலை செய்துள்ளேன். நல்ல தயாரிப்பாளர்கள் உள்ளார்கள், அனைவரும் எனக்கு உத்வேகமாக இருந்தார்கள். இதுவரை வேலை செய்த படங்களில் சவாலான படங்கள் என இன்னும் எதுவும் அமையவில்லை. நான்கு வருடங்கள் முன்பு என் அப்பாவுடன் பயணித்த நாட்களை ஓவியமாக வரைந்து வைத்துள்ளேன்.
செயற்கை நுண்ணறிவு பற்றி எனக்கு தெரியாது, அதனை பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு உதவுகிறதா என்று தான் பார்க்க வேண்டும். அது அவர்களை முந்திச் செல்லக் கூடாது. எனக்கு செயற்கை நுண்ணறிவு தேவைப்பட்டது இல்லை. இதுவரை நான் பேப்பர் பென்சில் மட்டுமே பயன்படுத்தி வரைந்து வேலை பார்த்து வருகிறேன். இது போன்ற விருதுகள் வழங்கும் விழாவில் அப்பாவை மிஸ் பண்ணுகிறேன், அவர் அதிகம் பேச மாட்டார், அதுவே அவரிடம் தான் நானும் கற்றுக் கொள்கிறேன். வெளிநாட்டு படங்களில் வேலை செய்யும் போது அவர் என்ன வேண்டுமோ அதனை முன்பாகவே கேட்டு பெற்று அதற்கு ஏற்றார் போல் வேலை செய்வார்கள்” என்றார்.


