குடிநீரில் கழிவுநீர் கலப்பால் சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு? திருச்சியில் சோகம்

 
ட் ட்

திருச்சி மாநகராட்சி 10-வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர்.

திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவில் குடிநீரில் மலம் கலந்ததன் விளைவாக 1 வயது குழந்தை,56 வயது முதியவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.  30க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உறையூர் பகுதியில் நாள்தோறும் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் பல நாட்களாக கழிவுநீர் கலந்து வருவதாக வார்டு கவுன்சிலர் தொடங்கி மாநகராட்சி உயர் அதிகாரிகள் வரை பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே மூன்று பேர் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  மூன்று பேர் உயிரிழந்ததற்கு பின்னர் உறையூர் பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை அவசர அவசரமாக பரிசோதனைக்குட்படுத்தும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம், கழிவுநீர் கலந்த குடிநீர் தொடர்பாக தாங்கள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மூவர் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என உறையூர் பகுதி மக்கள் கூறுகின்றனர். 

சிறுமி உட்பட மூவர் உயிரிழப்புக்கு காரணம் குடிநீரில் கழிவுநீர் கலப்பே என அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் குற்றச்சாட்டிவரும் நிலையில், மாநகராட்சி ஆணையர் சரவணன் சித்திரை தேர் திருவிழாவின் போது வழங்கப்பட்ட அன்னதானம் காரணமாக மூவர் உயிரிழந்திருக்கலாம் என விளக்கம் அளித்துள்ளனர்.