குப்பைத் தொட்டியில் போடுங்க.. இல்லையெனில் அபராதம் கட்டுங்க! சென்னை மாநகராட்சி அதிரடி..!
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மெரினா கடற்கரையை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொது பொறுப்பாகும். திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகள், உணவுப் பொருள் எச்சங்கள் உள்ளிட்ட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பாக, மெரினா கடற்கரையின் தூய்மையை உறுதி செய்வதற்காக தனியார் நிறுவனம் மூலம் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்யும் 7 இயந்திரங்கள் மற்றும் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 274 தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளிலிருந்து மட்டும் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது. மேலும், பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 53 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், பொதுமக்களின் போதியஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால், கடற்கரையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் காணப்படுவதால் அழகற்றதாகவும், சுகாதார குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. குறிப்பாக, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை போடாமல், திறந்த வெளிகளில் வீசப்படுகிறது.
இதன் காரணமாக சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையின் அழகும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதோடு, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சென்னை நகரின் நற்பெயருக்கும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளுக்கு பெருமளவில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் போது, அனைவரும் பொறுப்புனர்வோடு குப்பை கழிவுகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மை பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனை மீறி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய சட்ட விதிகளின் படி ரூ.5,000/– அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதும் இதன்மூலம் கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. தூய்மையான கடற்கரை – சுகாதாரமான சென்னை – அனைவரின் பொறுப்பு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


