‘தக் லைஃப்’ விவகாரம் : கர்நாடக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..
‘தக் லைஃப்’படத்தை திரையிட விதித்த தடையை எதிர்த்து தாக்கல் செயப்பட்ட ரிட் மனுவுக்கு பதிலளிக்குமாறி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் கமல், சிலம்பரசன் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்தத் திரைப்படம் கடந்த ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியான நிலையில், கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான கமல்ஹாசன், கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்ததாக தெரிவித்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், கர்நாடகாவில் திரைப்படம் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கூறப்பட்ட நிலையில், தான் தவாறாக பேசவில்லை என்றும், தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. ஆகையால் மன்னிப்புக் கேட்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதன்பின்னர் தக் லைஃப் படத்தை திரையிட்டால் திரையரங்குகள் தீயிட்டு கொளுத்தப்படும் என்று சில கன்னட அமைப்புகள் பகிரங்கமாக எச்சரித்தனர்.
தொடர்ந்து கர்நாடக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தக் -லைஃப் திரைப்படம் திரையிடுவதற்கான அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், வேண்டுமென்றால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுங்கள் என அறிவுறுத்தினர். இதனையடுத்து தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட விதித்த தடையை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ரிட் மனுவுக்கு கர்நாடக அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


