நெல்லை: தொழிலாளியின் வீட்டிற்கு ரூ.1.61 கோடி மின்கட்டணம்.. ஷாக்கான குடும்பத்தினர்..!
நெல்லை மாவட்டத்தில் தொழிலாளி ஒருவரது வீட்டிற்கு 1.61 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்துள்ள சம்பவம் அக்குடும்பத்தினரை அதிர்ச்சியடை செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி மாரியப்பன். மூலைக்கரைப்பட்டி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இவரது வீட்டிற்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்வாரிய ஊழியர் ஒருவர் வந்து மின் கணக்கீடு செய்திவிட்டு சென்றிருக்கிறார். இதனையடுத்து மாதந்திர மின்கட்டண விபரம் மாரியப்பனுக்கு குறுஞ்செய்தியாக வந்துள்ளது. இதனையடுத்து மின்கட்டணத்தை செல்ஃபோன் மூலமாக ஆன்லைனின் செலுத்த முயன்றபோது, அதில் காட்டப்பட்ட மின்கட்டணத்தைப் பார்த்து மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்.
அதில், தொழிலாளியான மாரியப்பனின் சிறிய வீட்டிற்கு மாதாந்திர மின்கட்டணமாக 1 கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 ரூபாய் ( ரூ. 1,61,31,281) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நடுத்தர குடும்பத்தினருக்கு இவ்வளவு மின்கட்டணமா என அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் இதுதொடர்பாக விளக்கமளித்த மின்வாரிய அதிகாரிகள், தொழில்நுட்ப கோளாறு மற்றும் கவனக்குறைவு காரணமாக இந்த தவறு நிகழ்ந்துள்ளதாகவும், இன்று மதியத்திற்குள் இந்த தவறு சரி செய்யப்பட்டு சரியான கட்டணம் பதிவேற்றப்படும் என்றும் தெரிவித்தனர். அதன்படி தவறுகள் சரிசெய்ய சரியான மின்கட்டணம் பதிவேற்றப்பட்டது. அதன்படி மாரியப்பன் வீட்டிற்கு ரூ.494 மட்டுமே மின் கட்டணமாக வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


