தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்ட திருப்பதி தேவஸ்தான அதிகாரி சஸ்பெண்ட்!

 
ச் ச்

திருப்பதி தேவஸ்தானத்தில் பணி புரிந்து கொண்டு கிறிஸ்துவ தேவாலயத்தில் பிரார்த்தனைகளை மேற்கொண்ட உதவி செயல் அதிகாரி  பணி இடைநீக்கம்  செய்யப்பட்டார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உதவி செயல் அதிகாரியாக  ஏ. ராஜசேகர் பாபு பணி புரிந்து வருகிறார். ராஜசேகர் பாபு தனது சொந்த ஊரான திருப்பதி மாவட்டத்தில் உள்ள புத்தூரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உள்ளூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனைகளில் கலந்துகொள்வதாக வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் விசாரணை மேற்கொண்டனர். 

இதில் தேவஸ்தானத்தின்  ஊழியராக பணியில் இருந்து கொண்டு   நடத்தை விதிகளைப் பின்பற்றவில்லை என்றும், ஒரு இந்து மத அமைப்பின் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியராக இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளதாகவும் விஜிலென்ஸ் துறை சமர்ப்பித்த அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு, விதிகளின்படி அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக அவரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.