திருப்பதி லட்டு சர்ச்சை- ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் 14 மணி நேரம் தொடர் விசாரணை

 
நெய்யில் கலப்படமா?.. திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு..

திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். நிறுவனத்தில் 14 மணி நேரம் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தினர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டு தயாரிப்பதற்கு மூலப்பொருளாக நெய் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து நெய் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி லட்டு குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு முடிவில் நெய்யில் விலங்குகள் கொழுப்பு இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. ஏ.ஆர்.நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கும் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் ஆந்திர அரசு லட்டு விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அந்த குழு விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  மேலும் மத்திய அதிகாரிகள் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முறையாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என 3 அதிகாரிகள் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை சேர்ந்தவர்கள் நான்கு இனோவா காரில்  23.11.24 மதியம் 12 மணி அளவில் திண்டுக்கல் பிள்ளையார் நத்தத்தில் உள்ளே ஏ ஆர் டைரி ஃபுட் நிறுவனத்திற்கு வருகை தந்தனர். பின்னர் நிறுவனத்தின் உள்ளே சென்றவர்கள் ஆய்வு பணிகள் மற்றும் விசாரணை மேற்கொண்டனர். ஆய்வுப் பணிகள் மற்றும் விசாரணை நள்ளிரவு இரவு 1.30 மணி அளவில் நிறைவடைந்தது.  ஏ.ஆர். டைரி ஃபுட் நிறுவனத்திற்கு வருகை தந்த அதிகாரிகள் 14 மணி நேரம் ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டனர். நிறுவனத்தில் இருந்து பல்வேறு பொருட்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் நிறுவனத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் ஆவணங்களிலும் சம்பந்தப்பட்டவர்களிடம் கையெழுத்து வாங்கி சென்றுள்ளனர் மேலும், கணக்குகள் ஏடுகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை  எடுத்து சென்றுள்ளனர்.