திருப்பூர் அருகே சிறுத்தை தாக்கியதில் ஒருவர் காயம்...அச்சத்தில் கிராம மக்கள்...

 
சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தவர்


திருப்பூர் அருகே தண்ணீர்பந்தல் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த ஒருவரை  தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள சோளக்கட்டில் 4 நாட்களுக்கு முன்னர் (  திங்கள்கிழமை ) புகுந்த சிறுத்தை விவசாயி வரதராஜன், கூலி தொழிலாளி மாறன் ஆகியோரைத் தாக்கியது. இதையடுத்து, வெங்கடாசலம், மோகன்ராஜ், அமராவதி வனச் சரக வேட்டைத் தடுப்புக் காவலர் மணிகண்டன் ஆகிய 5 பேரை சிறுத்தை அடுத்தடுத்து தாக்கி விட்டு திருப்பூர் நகர பகுதிக்கு இடம்பெயர்ந்தது.  

சிறுத்தை

தொடர்ந்து வனத் துறையினர்  பல்வேறு வழிகளில் சிறுத்தையைப் பிடிக்க முயன்றும் சிறுத்தை குறித்து எவ்வித அறிகுறியும் இல்லாததால், பாப்பாங்குளம் தோட்டத்துப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக செவ்வாய்க்கிழமை மாலை  வனத்துறை தெரிவித்தது. இதற்கிடையே  பொங்குபாளையம் பகுதிக்குள் நடமாட்டம்  இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து அங்கு வனத்துறையினர்  சோதனை செய்து வந்தனர்.  

இந்நிலையில் அப்பகுதியில் காணாமல்போன வளர்ப்பு நாய் ஒன்று, கிணறு ஒன்றின் அருகே ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. வனத்துறையின் ஆய்வில் சிறுத்தை, அந்த நாயை அடித்து கொன்று தின்றது தெரியவந்தது. மீதம் உள்ள நாயின் இறைச்சியை சாப்பிட சிறுத்தை வரலாம் என்பதால் இதையடுத்து, வனத்துறையினர், பெருமாநல்லூர், பொங்குபாளையம், பரமசிவம்பாளையம், ஈட்டிவீராம்பாளையம், மங்கலம் உள்ளிட்ட அருகருகே உள்ள 20 கிராமங்களில் புதிதாக 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தி, 50 பேர் கொண்ட 5 குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சிறுத்தை

சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொங்குபாளையம் கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.  இந்த நிலையில் இன்று  காலை திருப்பூர் சாலை அம்மாபாளையம் அருகே தண்ணீர்பந்தல் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ராஜேந்திரன்(60) என்பவரைத் தாக்கியது.  உடனடியாக  அப்பகுதி  மக்கள் அவரை மீட்டு  திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  தகவலின்பேரில் அங்கு வந்த  வனத்துறையினர்  சிறுத்தை இருப்பதை உறுதி செய்து அங்கு முகாமிட்டு, சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக  ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் சிறுத்தை ஊருக்குள் நுழைந்து ஒருவரை தாக்கியதால்  அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.