"இனி ரிலீஸ் ஆன 8 வாரத்திற்கு பிறகே OTTயில் புதுப்படம்" - திருப்பூர் சுப்ரமணியன்
வளர்ந்து வரும் நடிகர்கள், அடுத்தடுத்து நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஒரு படம் வெற்றி அடைந்தாலே 5 கோடி 10 கோடி வருமானம் கேட்பதில் தான் மும்முறமாக உள்ளனர் என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் சங்க நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளார். வருகின்ற டிசம்பர் ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், திரையரங்கம் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் மிக முக்கியமாக நான்கு வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் படங்களை எட்டு வாரத்திற்கு பிறகு வெளியிட வலியுறுத்த வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என ஆடியோ மூலமாக பேசியுள்ளார். இந்த ஆடியோவில் பேசிய அவர், கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்கம் நடத்துவதற்கு எவ்வளவு சிரமம் உள்ளது என்பதை திரையரங்கு நடத்திக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் அறிவீர்கள். இந்த நிலை தொடர்கிறது. ஜனவரியில் தான் ஒரு சில பெரிய படங்கள் வெளியாகிறது. அதன் பிறகு தேர்தல் அதனைத் தொடர்ந்து கோடையில் ஒரு சில படங்கள் தான் வருகிறது.
எட்டு வாரங்களுக்கு பிறகு திரைப்படங்களை OTT யில் வெளியிட வேண்டுமென முறையிட்டு பார்த்தோம் ஆனால் நடக்கவில்லை தற்பொழுது தமிழ் சினிமா இந்த நிலையில் உள்ளது. நான்கு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் படம் வருவதால் திரையரங்கு சென்று பார்ப்பதற்கு விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர். எட்டு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் படங்களை வெளியிட வேண்டும் என்ற முடிவுக்கு சம்மதிக்காத ஒரு சில தயாரிப்பாளர்களால் திரையரங்க வருமானம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதை உணர மறுக்கின்றனர். பல பெரிய நடிகர்களின் படங்கள் OTT வியாபாரத்தால் திரைக்கு வராமல் நிற்கிறது. கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்கள் படங்களை தயாரிக்க முன் வந்தால் 100 கோடி 150 கோடி வருமானம் வேண்டும் எனக் கூறி அவர்களை முடித்து விடுகிறோம். அவர்களும் கம்பெனியை இழுத்து மூடிவிட்டனர். தற்பொழுது யாரிடம் இவ்வளவு தொகையை நடிகர்கள் கேட்பார்கள். வளர்ந்து வரும் நடிகர்களும் ஒரு படம் வெற்றியடைந்தால் 5 கோடி வேண்டும், 10 கோடி வேண்டும் என நினைக்கிறார்கள் நல்ல படங்களை அடுத்து அடுத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சிறிய திரையரங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆலோசிப்பதற்காக வருகின்ற டிசம்பர் ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு காணொளி காட்சி வாயிலான கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் திரையரங்கத்தை நடத்துவதற்கான தீர்வுகளை கண்டறிய முற்படுவோம் என தெரிவித்துள்ளார். இனிமேல் திரைக்கு வரும் திரைப்படங்கள் எட்டு வாரத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியிடுவோம் என்ற உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே திரையரங்கில் படத்தை வெளியிடுவோம். ஜனவரிக்கு பிறகு தொடங்கும் புதிய படங்களுக்கு இந்த விதிமுறையை நாம் கட்டாயம் வழங்க வேண்டும்.


