சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது

 
Assembly

தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில்  வைத்திருந்த நிலையில்,  உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த மனுக்கள் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த சூழலில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள்  என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ஆம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த பல்கலைகழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்குவது, சித்த மருத்துவ பல்கலை., உருவாக்குவது உள்ளிட்ட 10 மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு| மூலம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் CPIM மூத்த தலைவர் சங்கரையா, பங்காரு அடிகளார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.