திமுக அரசு பக்தர்களிடம் தங்கள் அராஜக போக்கினை காட்ட முயற்சிக்க வேண்டாம் - அண்ணாமலை

 
annamalai mkstalin

திமுக அரசு பக்தர்களிடம் தங்கள் அராஜகப் போக்கினைக் காட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழா என்பது, சிதம்பரம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஆலயங்களில், பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம், கதக் உள்ளிட்ட பல்வேறு நாட்டியக் கலைஞர்கள் பங்குபெறும் சிவராத்திரி தினத்தையொட்டிய நாட்டியப் பெருவிழா ஆகும். கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த விழாவில், உலகெங்கும் உள்ள நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று, தஞ்சைப் பெருவுடையாருக்கும், மாமன்னர் ராஜராஜ சோழனுக்கும் தங்கள் நடனத் திறனால் மரியாதை செய்வது மரபு.

Annamalai

இந்த ஆண்டு, நேற்றைய தினம் நடைபெற இருந்து நாட்டியாஞ்சலி விழாவுக்கு, இந்து மத விரோத திமுக அரசு அனுமதி மறுத்ததால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆலய நடைமுறைகளிலும், இந்து மத நம்பிக்கையிலும் தொடர்ந்து தலையிட்டு வரும் திமுக, தற்போது ஒரு படி மேலாக, தஞ்சை பெருவுடையார் கோவில் நிகழ்வுகளிலும் தலையிட்டு, மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டாண்டு காலமாக நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவுக்கும் அனுமதி மறுத்திருப்பது, திமுகவின் இந்து மத வெறுப்பைக் காட்டுவதோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பெருமைக்குரிய அடையாளமான தஞ்சாவூர் பெரிய கோவிலையும் அவமானப்படுத்தும் நோக்கத்தையும் காட்டியிருக்கிறது.


உடனடியாக, தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை, ஒவ்வொரு ஆண்டையும் போல, ஆலய வளாகத்திலேயே நடைபெற அனுமதிக்க வேண்டும் என்றும், திமுகவின் இந்து மத விரோதப் போக்கை, உலகெங்கும் இருந்து, தஞ்சாவூர் வந்து, பெருவுடையார் கோவில் வளாகத்தில் தங்கள் நடனத் திறன் மூலம் மரியாதை செலுத்த வந்திருக்கும் நடனக் கலைஞர்களிடத்தும், பக்தர்களிடத்தும், தங்கள் அராஜகப் போக்கினைக் காட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.