அமலாக்கத்துறையின் பழிவாங்கும் நடவடிக்கை இனிமேலும் தொடர்ந்தால்....கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

 
ks alagiri

பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறையின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் இனியும் தொடருமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் டாக்டர் ஒருவரை வழக்கிலிருந்து விடுவிக்க ரூபாய் 3 கோடி பேரம் பேசி ரூபாய் 20 லட்சம் லஞ்சப் பணம் பெற்று காரில் தப்ப முயன்றிருக்கிறார் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி.  தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை 25 கி.மீ. தூரம் விரட்டி சென்று, திரைப்படங்களில் வருவது போல் மடக்கி கைது செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பொதுவாக மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள் போன்றோர் மீது 10 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் தொடுக்கப்பட்ட வழக்கில் தாமாக முன்வந்து  சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் வீடுகளில் சோதனை செய்து பழிவாங்கும் போக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரியே இத்தகைய லஞ்ச பேரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த சர்ச்சைகளுக்கு இடமளித்திருக்கிறது.

Ks Azhagiri

ஊழலை ஒழிக்க வந்த புனிதர்கள் போல் வேடம் தரித்து வந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரியை கைது செய்ததைத் தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட முற்பட்ட போது மத்திய பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்த முயன்றிருக்கிறார்கள்.  நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே சென்று சோதனை செய்ததில் அமலாக்கத்துறை அதிகாரி சம்பந்தப்பட்டதோடு, தலைமையகத்தில் இருப்பவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. இத்தகைய ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, அமலாக்கத்துறையே லஞ்ச ஒழிப்புக்கு பதிலாக லஞ்ச பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இதன்மூலம் மத்திய - மாநில அரசுகளின் துறைகள் எதிர்எதிரான நிலை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நோக்கோடு வழக்குகளை பதிவு செய்வது, அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனையிடுவது போன்றவற்றை நடத்தி அவர்களது அரசியல் செயல்பாடுகளை முடக்கி விடுகிற முயற்சியில் உள்ள அரசியல் பின்னணியை புரிந்து கொள்ளலாம். 

மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் கூட்டணி சேர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கண்காணிப்பில்  தமிழக அரசுக்கு எதிரான சீர்குலைவு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. இந்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாள்தோறும் தமிழக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மணல் குவாரியில் ரூ.4200 கோடி ஊழல் நடந்திருப்பதாக வாய்க் கூசாமல் கூறியிருக்கிறார். மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனையிட்டு விசாரணை நிலையில் இருக்கும் போது இதற்கு நீதிமன்ற தடை விதித்த பிறகு, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அண்ணாமலை இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்று தெரியவில்லை. 


எதையும் அடிப்படை ஆதாரமில்லாமல் தமிழக அரசை களங்கப்படுத்துகிற முயற்சியில் ஒன்றாகவே இதை கருத வேண்டியிருக்கிறது. இத்தகைய குற்றச்சாட்டை கூறுகிற போது, அமலாக்கத்துறையோடு நெருங்கிய உறவு வைத்திருக்கிற அண்ணாமலை அதற்கான ஆதாரங்களை பெற்று குற்றச்சாட்டுகளை கூற தயாராக இருக்கிறாரா ? அப்படி தயாராக இல்லையெனில் தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என கூறி, பொது மன்னிப்பை அவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்ற அவதூறான கருத்து தான் என்ற முடிவுக்கு வர வேண்டும்.  ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறையின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் இனியும் தொடருமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.