ஆங்கிலேயர்கள் நமது அடையாளத்தை அழிக்க நினைத்தனர். - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

 
 ஆளுநர் ரவி

10 ஆயிரம் வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். 
 
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: 10 ஆயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்தவன், அப்போது வள்ளலாரின் நூல்களை படித்தபோது மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது.  எல்லா உயிர்களையும் நம்மில் ஒரு அங்கமாக பார்ப்பது தான் சனாதன தர்மம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் வெளிப்பாடு

இந்தியாவில் சிறுதெய்வம், பெருந்தெய்வம் வழிபாடு இருந்தபோது ஒருவரும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. வெளியில் இருந்து புதிதாக வந்த மதங்கள் தங்களது மதம் பெரிது எனக் கூறியதால் தான் பிரச்சனை வந்தது. ஆங்கிலேயர்கள் நமது அடையாளத்தை அழிக்க நினைத்தனர். அவர்களது நாட்டு மக்களைக் கொண்டு வந்து நமது நம்பிக்கைகளை மாற்ற முயன்றனர். ஜி.யு.போப், பிஷப் கால்டுவெல் போன்றோரும் அதன் ஒரு பகுதி தான். நமது நம்பிக்கைகளை அழிக்க வந்தவர்கள் தான் அவர்களும். தமிழ்நாடு இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம். இவ்வாறு கூறினார்