வன்னியர் இடஒதுக்கீடு ரத்து; தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் வன்னிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாலும் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இச்சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர அவசரமாக இச்சட்டம் இயற்றப்பட்டதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
பாமகவின் 40 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு. அதை நீதிமன்றம் ரத்து செய்தது பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோரை அதிர்ச்சி அடையச் செய்தது. இச்சட்டத்தை மீட்டெடுக்கும் வரையில் ஓய மாட்டோம் என ராமதாஸ் வன்னியர் சமூகத்தினருக்கு உறுதி அளித்திருக்கிறார். இது தொடர்பாக அவசர ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்தார். இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவிருப்பதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தால் தமிழகத்திற்கான 69% இட ஒதுக்கீடு எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் அரசியலமைப்பு சட்ட விதிகளின் படியே வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.