கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி... ஆனால் ஒரு கன்டிஷன்!

 
கிரிவலம் கிரிவலம்

தமிழ்நாட்டிலுள்ள சிவன் தலங்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு கார்த்திகை மாதம் நடைபெறும் மகா தீப திருவிழா சிறப்புவாய்ந்தது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தாலும், இந்த திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி திருவிழா நடைபெற்றது. கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் இந்தாண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு... கிரிவலம் வரத் தடை! | nakkheeran

ஆனால் மூன்றாம் அலை அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டும் அனுமதி வழங்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தீப திருவிழா பக்தர்களின்றி நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியது. குறிப்பாக நவம்பர் 17ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 20ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாட வீதியில் நடைபெறும் மகா தேரோட்டம் இந்தாண்டும் நடைபெறாது. மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கிரிவலம் செல்லவும் தடை என்றும் அறிவித்தது.

கிரிவலம்

இதை எதிர்த்து அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று பதில் மனு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு, "கொரோனா காரணமாக நாளை கோயிலுக்குள் மக்கள் அனுமதிக்கபட மாட்டார்கள். கிரிவலப் பாதையில் மொத்தமாக 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி உண்டு. இதில் 15 ஆயிரம் பேர் வெளியூர் பக்தர்கள்; 5 ஆயிரம் உள்ளூர் பக்தர்கள் கலந்துகொள்ளலாம். அதேபோல பரணி தீபத்தின்போது கட்டளைதாரர்கள் 300 பேருக்கு அனுமதி வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.