காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை!

 
stalin stalin

ஜம்மு காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில்,  இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் கல்வி பயில சென்றுள்ள தமிழக மாணவர்கள், வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.