செந்தில் பாலாஜிக்கு இன்னும் 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும் - மா.சுப்பிரமணியன்

 
masu

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்னும் மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சட்டவிரோத பணமோசடி வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை அடுத்து, செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யவும் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.  இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
 இந்த கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றமும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்று இரவே காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.
 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் அமைச்சர்ச் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.
 இதன் காரணமாக அவருக்கு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்ப்படும் என கூறினார்.மேலும், எய்ம்ஸ் மருத்துவர்களும் செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்யலாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.