டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு..
நடைபெற்று முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதல் 480 காலி பணியிடங்கள் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையன் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2,604, தட்டச்சர் 1705, ஸ்டெனோ டைப்பிஸ்ட் 445, பில் கலெக்டர் 66 உள்பட மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. எனினும் இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஜூன் 9-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-4 தேர்வினை எழுதினர்.
சென்னையில் மட்டும் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் குரூப்-4 தேர்வை எழுதினர். இந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்த மாதம் அக்டோபரில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. https://www.tnpsc.gov.in/English/SelectionSchedule.html என்ற இணையப் பக்கத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஏற்கனவே 6,244 காலி பணியிடங்களுடன் புதிதாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன பாதுகாவலர் உள்ளிட்ட 28 வகையான பணிகளுக்கான 480 கூடுதல் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் இந்த அறிவிப்பு தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.