இன்று ஆடி பௌர்ணமி : இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!

 
1 1

திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கிரிவலம் எந்த நேரத்தில் துவங்கி, எந்த நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்ற விபரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 2025 பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான நேரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத பவுர்ணமி ஆகஸ்ட் 08ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று பகல் 02.52 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 09ம் தேதி பகல் 02.26 வரை பவுர்ணமி திதி உள்ளது. ஆகஸ்ட் மாத பவுர்ணமி ஆடி வெள்ளிமற்றும் திருவோணம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது மிக அதிகமான சிறப்புடையதாக கருதப்படுகிறது.

ஆகஸ்ட் மாத பவுர்ணமி கிரிவலம் செல்பவர்கள் ஆகஸ்ட் 08ம் தேதி பகல் 02.12 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 09ம் தேதி பகல் 01.24 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்தி பக்தர்கள் பவுர்ணமி கிரிவல வழிபாட்டினை மேற்கொள்ளலாம். திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் செல்வ நலன் கிடைக்கும். வைகுண்ட பேறு கிடைக்கும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பார்கள். அதிலும் பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரமும், மகாலட்சுமிக்கும் அம்பிகைக்கும் உரிய வெள்ளிக்கிழமையில் கிரிவலம் வருவது இன்னும் விசேஷமான பலன்களை தரும்.

பவுர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலை வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 08ம் தேதி, இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பும் இணைந்தே அமைந்துள்ளது. பொதுவாக ஆடி மாதத்தில், வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை வழிபடுவது சிறப்பு. அதுவும் வரலட்சுமி நோன்பு அன்று கிரிவலம் வந்து உண்ணாமுலை அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.