இன்று கார்த்திகை அமாவாசை: இன்று இந்த விஷயங்களை செய்ய மறக்காதீங்க!

 
1 1

அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்கு உரியது என அனைவருக்கும் தெரியும். அமாவாசை நாட்களில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, எள்ளும் தர்ப்பணம் கொடுத்தும், அவர்களின் ஆத்மாவை திருப்தி அடைய வைத்து, அதன் மூலம் அவர்களின் ஆசிகளை பெறுவதற்குரிய மிக முக்கியமான நாளாகும். முன்னோர்களின் ஆசிகள் இல்லாமலும், அவர்களின் கோபத்தால் பித்ரு சாபமும், மனவருத்தத்தால் பித்ருதோஷமும் இருக்கும் குடும்பத்தில் பிள்ளைகளால் பிரச்சனை, திருமண தடை, நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் வளர்ச்சி என்பதே இல்லாமல் இருப்பது போன்ற பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இதனால் குடும்பத்தில் உள்ள பணப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் தீருவதற்கு அமாவாசை தினங்களில் முன்னோர்களின் ஆசியை பெறுவதற்காக விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. அமாவாசை அன்று காலை ஒரு வேளையாவது உபவாசமாக இருப்பது சிறப்பு. அப்படி இருக்க முடியாதவர்கள் பழம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டோ அல்லது வழக்கம் போல் உணவு சாப்பிட்டுக் கொண்டோ முன்னோர்கள் வழிபாட்டினை செய்யலாம். அமாவாசைகளில் கார்த்திகை மாதத்தில் வரும் அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு.  கார்த்திகை மாத அமாவாசையானது நவம்பர் 19ம் தேதி வருகிறது. அன்றைய நாளில் காலை 10.28 மணிக்கு தான் அமாவாசை தொடங்குகிறது. இந்த திதியானது நவம்பர் 20ம் தேதி மதியம் 12.31 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம். 

அமாவாசை நாளில் நம் வீட்டின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு நீர்நிலைகளில் நீராட வேண்டும். திதி தாமதமாக தொடங்கும் நிலையில் முன்னோர் திதி, தர்ப்பணம் போன்றவைகளை வியாழக்கிழமை (நவம்பர் 20) காலையில் செய்யலாம். ஒருவேளை நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் கங்கை தீர்த்தத்தை வாங்கி குளிக்கும் நீரில் கலந்து நீராடலாம். அப்போது நம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உச்சரித்து சூரிய பகவானுக்கு தண்ணீர் படைத்து வழிபடலாம். 

அடுத்ததாக கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றி வழிபடுவது என்பது இருக்கும். தீப சொரூபமாக நாம் இறைவனை வழிபடுவோம். அப்படியான நிலையில் அமாவாசை நாளில் மாலையில் சூரியன் மறைவுக்குப் பின் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். வீட்டின் மெயின் வாசல் அல்லது துளசி செடியின் அருகில் ஏற்றினால் நல்லது.  இது பெருமாளின் ஆசீர்வாதம் கிடைக்க உதவுவதோடு, சனி பகவானால் ஏற்படும் பிரச்னைகள் நீங்கவும் செய்யும். 

கார்த்திகை அமாவாசை புதன் கிழமை வருவதால் அன்றைய நாளில் மாலை பெருமாளை வழிபட வேண்டும். இதனால் செல்வ வளம், வெற்றி, சுப காரிய தடை ஆகியவை நீங்கும். வீட்டில் வழிபடும்போது துளசி இலை, பஞ்சாமிர்தம் வைத்து நைவேத்யம் செய்யலாம்.

இன்றைய நாளில் மாலை நேரத்தில் மாவிளக்கு ஏற்றி வழிபடலாம். அதில் நல்லெண்ணெய், பசுநெய் ஊற்றி மகாலட்சுமியை மனதார நினைத்து வழிபட்டால் செல்வம் பெருகும். இன்றைய நாளில் குலதெய்வ வழிபாடும் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக நம்பப்படுகிறது. 

செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்

கார்த்திகை அமாவாசை நாளில் பின்வரும் முக்கியமான செயல்களை செய்வது பித்ரு தோஷத்தை போக்கி முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தர உதவும்.

1. புனித நீராடல்:

அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானதாகும். அருகில் உள்ள புனித நதிகள் அல்லது கடலில் நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய உதவும். புனித நதிகளில் நீராட முடியாதவர்கள், வீட்டில் குளிக்கும் நீரில் கங்கா தீர்த்தம் அல்லது புனித நதியை மனதில் நினைத்து “ஓம் நமோ நாராயணாய:” மந்திரத்தைச் சொல்லி குளிக்கலாம்.

2. அரச மர வழிபாடு:

அமாவாசை நாளில் அரச மரத்தை வலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும். மாலையில் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட வேண்டும். பின்னர் அரச மரத்தடியில் அகல் விளக்கு ஒன்றை வைத்து நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் ஊற்றி திரியிட்டு “ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ:” என்கிற மந்திரத்தை உச்சரித்தபடி விளக்கேற்ற வேண்டும். அதன் பின்னர் மரத்தை மூன்று முறை வலம் வந்து வழிபடுவது பித்ரு தோஷத்தை நீக்கும்.

3. மாலையில் விளக்கேற்றுதல்:

அமாவாசை தினத்தில் மாலை வேலையில் சூரியன் மறைவுக்கு பின்னர் வீட்டில் கண்டிப்பாக விளக்கு ஏற்ற வேண்டும். குறிப்பாக வீட்டின் முற்றங்கள், நிலை வாசல் அல்லது துளசி செடிக்கு அருகில் விளக்கு ஏற்றுவது சிறப்பு. இந்த விளக்கு மீண்டும் மோட்சத்திற்கு திரும்பும் முன்னோர்களுக்கு ஒளி காட்டுவதற்காக ஏற்றப்படும் தீபமாகும். இந்த தீபத்தை மாலையில் மறக்காமல் ஏற்ற வேண்டும்.

4. குலதெய்வ வழிபாடு:

முன்னோர் வழிபாடு முடிந்த பின்னர் அமாவாசை தினத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது கூடுதல் சிறப்பு. குலதெய்வத்தின் அருளும், முன்னோர்களின் ஆசியும் ஒருங்கே கிடைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வீட்டில் பூஜைகள் முடிந்த பின்னர் ஏழைகள், ஆதரவற்றவர்கள், வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது பெரும் புண்ணியத்தைத் தரும். உணவு, உடை, பணம் போன்றவற்றை தானங்களை வழங்குவது செல்வ வளங்களை அதிகரிக்கும்.

5. சிவன் மற்றும் பெருமாள் வழிபாடு:

அமாவாசை தினத்தில் சிவன் மற்றும் விஷ்ணு பகவானை வழிபடுவது மிகவும் விசேஷமாகும். சிவன் வழிபாடு நாம் செய்த கர்ம பாவங்களை போக்கி வாழ்வில் வளமை சேர்க்கும். விஷ்ணு வழிபாடு என்பது செல்வ வளத்தையும் வெற்றியையும் அளிக்கும். ஆலயங்களுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே சிவன் அல்லது பெருமாள் புகைப்படங்களை வைத்து வாசனை மலர்கள் சாற்றி அவர்களின் திருநாமங்களை உச்சரித்து வழிபடலாம்.

6. மாவிளக்கு ஏற்றுதல்:

அமாவாசை தினத்தில் மாவிளக்கு ஏற்றுவது என்பது மிகுந்த சிறப்பானதாகும். இடித்த பச்சரிசி மாவில் சிறிது வெல்லம் கலந்து ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து விளக்கு போல் செய்து அதில் நெய் ஊற்றி திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். பூஜை முடிந்த பின்னர் இந்த இதை பிரசாதமாக வீட்டில் உள்ள அனைவரும் உண்ண வேண்டும். இந்த மாவிளக்கு என்பது துன்பங்களை நீக்கி, வாழ்வில் செல்வம், வளம், மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.