மனிதநேயம் மலர்ந்த நாள் : இன்று எம்.ஜி.ஆர். பிறந்தநாள்..!
தமிழர்களின் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் நிறைவுபெறுகின்றன. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் சொல்லிவைத்தது போல் ஒரு மாறுதல் நடந்தது. அதாவது, மார்கழி மாதம் முதல் தேதி அன்று கட்டப்படும் அந்த ஸ்பீக்கர்கள், ஜனவரி 17-ம் தேதி முடிந்ததும்தான் கழற்றப்படும்.
சினிமா பாடல்கள்மூலம் வாழ்வியலை சாமானியர்களுக்குக் கற்றுத்தந்தவர் எம்ஜிஆர். அதனால்தான், அவரை தங்களது மூச்சுக்காற்றாகக் கருதிய பாமர மக்கள் அவருக்கு, 'வாத்தியார்' என்று செல்லப் பெயர் சூட்டினார்கள்.'திருடாதே பாப்பா திருடாதே' என்று குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பார். 'நான் ஆணையிட்டால்..அது நடந்துவிட்டால்' என்று ஏழை மக்களுக்கு நம்பிக்கை டானிக் ஊற்றிக்கொண்டிருப்பார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று இளைஞர்களுக்கு உற்சாக உரம் போடுவார். கிராமம் முழுக்க அன்றைக்கு எம்.ஜி.ஆரின் குரலாக டி.எம்.சௌந்தர்ராஜன் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். விவரம் அறிந்தவர்களுக்குத்தான் அது டி.எம்.எஸ். குரல். ஆனால்,கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றைக்கும் அது எம்.ஜி.ஆரின் குரல்தான்.
எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத மற்றொரு 'சிறப்பு' எம்.ஜி.ஆருக்கு மட்டுமே இருக்கிறது. பொதுவாக, அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாளின்போது, அந்தக் கட்சியினர் ஊரின் முக்கிய இடத்தில் போட்டோ வைத்து மலர்தூவி, புகழ்பாடுவார்கள். எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் ஒவ்வொரு தொண்டரின் வீட்டுக்கு முன்பாகப் புகைப்படம் வைத்து , ஸ்பீக்கர் கட்டி அவரது புகழ் பாடுவார்கள். தவிர, அவரவர் வசதிக்கேற்ப பானகமோ,அன்னதானமோ வழங்குவார்கள். சினிமா, அரசியல் என்ற இரட்டைக் குதிரையில் சவாரிசெய்து உச்சம் தொட்டவர் எம்.ஜி.ஆர். இங்கு குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் இன்றைக்கும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
வறுமையும் துன்பமும் தான் எம்.ஜி.ஆரின் பெஸ்ட் டீச்சர்!
எம்.ஜி.ஆரின் அப்பா பெயர் கோபாலமேனன். மாஜிஸ்டிரேட்டராக பணிபுரிந்தவர். அநீதிக்கு துணைபோக மறுத்து நீதி தவறாமல் வாழ்ந்தவர். இப்போது தெரிகிறதா இந்த குணம் எம்.ஜி.ஆருக்கு எங்கிருந்து வந்தது என்று. நம் நாட்டில் நேர்மையான பணியாளர்கள் தான் நிம்மதியாக வாழமுடியாதே. அவரை எர்ணாகுளம், அரூர், கரூர், திருச்சூர் முதலிய இடங்களுக்கு பணிமாற்றம் செய்தனர். இவ்வாறு பணிமாற்றம் அவரை தொடர்ந்து கொண்டே இருந்ததால், மனவேதனை அடைந்தவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மனைவி சத்யபாமாவுடன் இலங்கை சென்றார். அங்கு கண்டியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹந்தனா என்ற இடத்தில் 1917ம் ஆண்டு, ஜனவரி17ம் தேதி கோபாலமேனன் – சத்யபாமா தம்பதியினருக்கு ஐந்தாவது குழந்தையாக எம்.ஜி.ஆர் பிறந்தார்.
எம்.ஜி.ஆருக்கு இரண்டு அண்ணன்கள். இரண்டு தமக்கைகள். அவர்களில் கமலாட்சி, சுபத்ரா, பாலகிருஷ்ணன் மூவரும் இறந்து போக, கோபாலமேனன், சத்யபாமா, சக்ரபாணி, ராமச்சந்திரன் என்று குடும்பம் நால்வராக சுருங்கியது. எம்.ஜி.ஆருக்கு இரண்டரை வயதிருக்கும் போது, கோபாலமேனன் குடும்பத்துடன் தாயகம் திரும்பினார். இந்த முறை முதலில் இருந்தது போல் செல்வச் செழிப்புடன் வாழாமல் வாடகை வீட்டில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார். வறுமை இங்கு துளிர்விட ஆரம்பித்தது. எம்.ஜி.ஆருக்கு மூன்று வயதாகும் போது, கோபாலமேனன் இறந்து போக தனது இரண்டு பிள்ளைகளையும் சத்யபாமா தனியொருத்தியாக வளர்க்கும் நிலைக்கு ஆளானார். அப்பா இல்லாத வீட்டில் வறுமையை பற்றி சொல்லவா வேண்டும். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. படிப்பில் ஆர்வம் இருந்தாலும் வறுமை காரணமாக எம்.ஜி.ஆரால் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. இந்த தாக்கம் தான் பின்னாளில் பள்ளிக்கூடத்தில் சத்துணவு திட்டத்தை உண்டாக்க தூண்டுகோலாக இருந்தது.
தாய் சத்யபாமாவின் தம்பி நாராயணன் அப்போது கும்பகோணத்தில் “ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி” என்ற நாடகக்குழுவில் பின்பாட்டு பாடி வந்தார். குடும்ப கஷ்டத்தை போக்க, சக்கரபாணியும் ராமச்சந்திரனும் நாராயணன் பணியாற்றிய நாடகக்குழுவில் இணைந்தனர். அந்த நாடகக்குழுவில் பி.யு. சின்னப்பா, டி.எஸ்.பாலையா ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். இங்கு தான் தொடங்கியது எம். ஜி. ஆரின் எதிர்நீச்சல். முதலில் சிறுவேடங்களில் நடித்தார். 1935ம் ஆண்டு எஸ்.எஸ்.வாசனின் சதிலீலாவதி படத்தில் போலீஸ் வேடமேற்று நடித்தார் தனது பத்தொன்பதாம் வயதில் நூறு ரூபாய் சம்பளத்தில்! இதுதான் எம்.ஜி.ஆரின் முதல்படம்!
எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பாலக்காட்டைச் சேர்ந்த பார்கவி. அவர் துருதிர்ஷ்டவசமாக இறந்துபோக, சிலகாலம் துறவி போல வாழ்ந்தார். பிறகு சதானந்தவதியை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வை தொடங்கினார். ஆனால் இந்த வாழ்வும் அவருக்கு இனிமையாக அமையவில்லை. சதானந்தவதிக்கு இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையில் இருக்கும் நிலை வந்தது. இக்காலங்களில் எம்.ஜி.ஆர் மீண்டும் துறவி போல வாழத்தொடங்கினார். பிறகு முதல் மனைவி பார்கவி போன்று தோற்றமளித்த ஜானகியை சதானந்தவதியின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
பதினோரு ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு, ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக முன்னேறினார். பிறகு பல படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதே சமயம் துன்பமும் அவரை துரத்திக்கொண்டே இருந்தது. இருந்தாலும் சளைக்கவில்லை. அத்தனையும் கடந்து வந்தார்.
1967ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் வீட்டில் ” பெற்றால் தான் பிள்ளையா” பட விவகாரத்தில் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர் சுடப்பட்டார். குண்டு இடதுபுற காது அருகே கன்னத்தில் பாய்ந்தது. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் முதல்கட்ட சிகிச்சை முடிந்து சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கழுத்தில் பாய்ந்திருந்த குண்டு மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்ததால் அதை வெளியே எடுத்தால் உயிருக்கு ஆபத்து என்று வெளியே எடுக்காமல் அப்படியே உள்ளுக்குள் வைத்து தைத்தனர். சிலகாலங்களில் அந்த குண்டை தொண்டை வழியாக எடுத்தனர். அதன்பிறகு எம்.ஜி.ஆரின் குரல்வளம் பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்து காவல்காரன் படத்தில் நடித்தார். சொந்தக்குரலிலயே பேசினார். அந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படி பல துன்பங்கள் நேர்ந்தாலும் எதிர்நீச்சல் அடித்து வெற்றிக்கொடி ஏத்தியதால் தான் இன்றுவரை நாம் அவரை கொண்டாடுகிறோம்.
பசி பட்டினியின் எல்லையை தொட்டவராக அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளின் சிகரத்தை தொட்டவராக விளங்கியதால் தான் அவரால் ஏழை மக்களின் கஷ்டங்கள் தெரிந்து அவர்களுக்கு பல நன்மைகள் செய்ய முடிந்தது. சினிமாவில் ” ஓடி ஓடி உழைக்கணும்… ஊருக்கெல்லாம் கொடுக்கணும்… ” என்று பாடினார். நிஜ வாழ்விலும் அப்படித்தான். அவர் வசதியாக வாழ்ந்த காலத்தில் அவர் வீட்டில் மூன்று வேளையும் ஐம்பது அறுபது இலைகள் வறுமையில் வாடுபவரின் பசியை போக்க விரிக்கப்படும். இதனால் 1967ம் ஆண்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், 1985ம் ஆண்டில் புரூக்சின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும் பிரச்சாரத்திற்கு செல்லாமலே படுத்த படுக்கையில் இருந்து தேர்தலில் வெற்றிபெற முடிந்தது.
இப்படிப்பட்ட மனிதருக்கு தனிப்பட்ட முறையில் இரண்டு மனக்குறைகள். ஒன்று குழந்தைப் பேறு இல்லாதது. இரண்டாவது முறையான கல்வி பெற முடியாதது. இதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்காக அவர் தீட்டி வைத்திருந்த சில திட்டங்கள் நிறைவேறாததால், நிறைவேறாத ஆசைகளும் அவருக்குள் உண்டு. இப்படி சாமான்யனாக வாழ்ந்த போதிலும் உச்சம் தொடுவதற்கு காரணம், வறுமையும் துன்பமும் அவருக்கு பாடம் புகட்டியதே!
அப்படிபட்ட வறுமையும் துன்பமும் அவருக்கு மட்டும் பெஸ்ட் டீச்சர் அல்ல! நமக்கும் தான்! வறுமையும் துன்பமும் சூழ்ந்தாலும் எம்.ஜி.ஆர் போல எதிர்நீச்சல் அடித்தால் நாம் அவரை போல உச்சத்தை தொடலாம்.
இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். முன்பின் தெரியாத மனிதர்கள் இன்னிக்கு என் தலைவன் பிறந்தநாள் என்று இனிப்பு கொடுத்து மகிழ்ந்துகொண்டிருப்பார்கள்.


