தொடர்ந்து அதிகரிக்கும் தக்காளி விலை.. இன்று எவ்வளவு தெரியுமா?? - இல்லத்தரசிகள் கலக்கம்..

 
தக்காளி


சென்னையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கும் சில்லறை விலையில் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

சென்னை கோயம்பேடு  காய்கறி சந்தை தான் ,  சென்னை மாற்றும் புறநகர் பகுதி மக்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,  வெளிமாநிலங்களில் இருந்து  வரும் காய்கறிகள் இங்கிருந்துதான்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு  சப்ளை ஆகிறது.  பொதுவாகவே காய்கறிகளின் வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவதும், வரத்து குறையும் போது விலை அதிகரிப்பதும் வழக்கமான ஒன்றுதான்.  அந்தவகையில் கோடை மழை காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை அதிகரித்துக் காணப்படுகிறது.  
 தக்காளி

எதிர்பாராத கோடை மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்திருக்கிறது. வழக்கமாக 80 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும் நிலையில், தற்போது 30 லாரிகளில் மட்டுமே தக்காளி கொண்டு வரப்படுகிறது.  இதனால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில்  22வது நாளாக இன்றும் தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில்  ஒரு கிலோ தக்காளி மொத்த  விற்பனையில் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அதேபோல் இன்று  சில்லறை விற்பனையில் நாட்டு தக்காளி  ரூ. 100 க்கும் நவீன தக்காளி  ரூ.110 க்கும் விற்பனையாகிறது.
 தக்காளி லாரிகள்
பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல்  ன்னை, கோவை, மதுரை, திருச்சியில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது . பிற கடைகளில் தக்காளி விலை உயர்வு காரணமாக விற்பனையும் கனிசமாக குறைந்திருக்கிறது. அதேநேரம் சமையலுக்கு அத்தியாவசிய பொருளான தக்காளியின் இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.