மீண்டும் அதிகரித்த தக்காளி விலை - ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

 
tomotto

வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 

கடந்த சில தினங்களாக விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவு காரணமாக 2 நாட்களில் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்தது. இதன் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.80லிருந்து ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். அத்துடன் தமிழக அரசால் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வந்தது. இதன் காரணமாக சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மொத்த விலையில் ரூ.50 ஆக குறைந்தது. வரத்து அதிகரிப்பின் காரணமாக கிலோ ரூ.80-க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோவுக்கு ரூ.60ல் இருந்து ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் தக்காளி விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. வரத்து குறைவால், ஒரேநாளில் ரூ.60-க்கு விற்ற தக்காளி, 15 ரூபாய் உயர்ந்து ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புறநகர் பகுதிகளில் தக்காளி சில்லறை விற்பனை ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை என தகவல்கள் வெளியாகியுள்ளன.