துப்பாக்கிச்சூடு எதிரொலி! தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்

 
border

தமிழக மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறை சுட்டுக்கொலை செய்தது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், பாலாறு வழியாக தமிழக-கர்நாடக எல்லையில் செல்லும் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா (வயது 45), செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (40), இளையபெருமாள் (40) ஆகியோர் பரிசல் ஒன்றில் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறில் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டின் போது மீனவர்கள் ரவி, இளையபெருமாள் ஆகியோர் தப்பி ஓடிய நிலையில், ராஜா மாயமானார். இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது உண்மை என்பது தெரியவந்தது. இந்த துப்பாகிச்சூட்டில் ராஜா என்பவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. அடிப்பாலாறு பகுதியில் ராஜா உடல் கண்டெடுக்கபட்டது.

tamilnadu fishermen

சம்பவ நடந்த பகுதி கர்நாடக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள இடமாகும். இங்கு 3 பேரும் மான் வேட்டையாட சென்றபோது சுற்றி வளைக்கப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கர்நாடக வனத்துறையினர்  விளக்கம் அளித்துள்ளனர். பரிசலில் இருந்த 2 மூட்டை மான் இறைச்சி, நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றையும், பரிசலையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் கர்நாடக வனத்துறை தெரிவித்துள்ளது. 

இதனால் தமிழக-கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவி வருவதால் அடிப்பாலாறு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் கர்நாடக போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறை சுட்டதா என விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், பாலாறு வழியாக தமிழக-கர்நாடக எல்லையில் செல்லும் போக்குவரத்துக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.