திருச்செந்தூர் கோயிலில் சோகம்- வடமாநில தொழிலாளி பலி
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் வடமாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று கோவில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தின் மேல் தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அவிஜித் போதார் என்ற வடமாநிலத் தொழிலாளி கீழே தவறி விழுந்து தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சக பணியாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த அவிஜித் போதாருக்கு திருமணமாகி 1 ஆண் குழந்தை உள்ளது.
தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் காவல் துறையினர்கள் உயிரிழந்த அவிஜித் போதார் உடலை நேரில் பார்வையிட்டார்கள். அதனை தொடர்ந்து அவரது உடலானது தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


