போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் - அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்திற்குரியது!!

 
ttv dhinakaran

போக்குவரத்து ஊழியர்களின்  பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கும் தமிழக அரசின்பிடிவாதப் போக்கு கண்டனத்திற்குரியது என்று தினகரன் கூறியுள்ளார்.

bus

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கும் தமிழக அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்திற்குரியது.போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தொடங்கி, பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் என பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

tn

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அரசு, அதில் கவனம் செலுத்தாமல் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகளை இயக்க முயற்சிப்பது அரசின் ஆணவப் போக்கையே வெளிக்காட்டுகிறது.பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் அரசின் இதுபோன்ற தவறான அணுகுமுறை பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதோடு, தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கும் அரசுப் பேருந்துகள் மீதான அச்சத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. எனவே, இனிமேலாவது அரசின் பிடிவாதப் போக்கை கைவிட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, பொதுமக்கள் தங்களின் பொங்கல் பண்டிகைக்கான பயணத்தை எந்தவிதமான பாதிப்புமின்றி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.