இரண்டாம் மகாத்மா வாஜ்பாய்க்கு அஞ்சலி - வானதி சீனிவாசன்

 
vanathi srinivasan

வாஜ்பாயின் கனவு திட்டமான தங்க நாற்கரச் சாலை திட்டம், 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு, அதிவேகமெடுத்து, இன்று சாலைகளே இல்லாத பகுதிகளே இல்லை என்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது என்று வானதி சீனிவாசன்  தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாம் மகாத்மா வாஜ்பாய்க்கு அஞ்சலி இன்று முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்.  வாஜ்பாய் அவர்களை நினைக்கும்போதெல்லாம், 1980 ஏப்ரல் 6-ம் தேதி, மும்பையில் பாஜக தொடங்கப்பட்டபோது அவர் ஆற்றிய முதல் உரையில், " 'தேசம் முதலில், அடுத்து கட்சி, கடைசியில் தனி நபர் நலன்' (Nation First, Party Next, Self Last)" என்பது தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தேசத்தை நேசித்தவர். அதை பாஜக தொண்டர்களின் மனதிலும் புகுத்தியவர். விடுதலைக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சுற்றியே நடந்து வந்த இந்திய அரசியலை பாஜகவை சுற்றி நடக்க வைத்தவர். 

tn

அரை நூற்றாண்டு காலம், 'காங்கிரஸ் -  காங்கிரஸ் எதிர்' என்றிருந்த இந்திய அரசியல், கடந்த கால் நூற்றாண்டாக, 'பாஜக - பாஜக எதிர்' என்று மாறியிருக்கிறது. காற்றில் வெண்ணெய் எடுப்பதற்கு ஒப்பான, இந்த அசாத்திய சாதனையை செய்து காட்டியவர் வாஜ்பாய். அவரும் திரு. அத்வானி அவர்களும் இணைந்து அரை நூற்றாண்டு காலம் இந்திய அரசியல் போக்கை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக விளங்கினர். 1977-ம் ஆண்டு, திரு. மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த முதல் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார் வாஜ்பாய். அப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட போது, அங்கெல்லாம் நெடுஞ்சாலைகள் மிகச் சிறப்பாக போடப்பட்டிருப்பதையும், பராமரிக்கப்படுவதையும் கண்டார். இந்தியா வளர்ச்சி அடைய  வேண்டுமானால், போக்குவரத்து மிக எளிதாக வேண்டும். அதற்கு சாலைகள் அவசியம் என்பதை உணர்ந்தார். ஆனால், அதனை செயல்படுத்தும் வாய்ப்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1998-ல் அவர் பிரதமரான போது தான் அமைந்தது. 1977-ல் அவர் கண்ட கனவு தான், 1998-ல் 'தங்க நாற்கர சாலை'யாக உருவெடுத்தது. இத்திட்டத்தால், இந்தியாவின் நாற்புரங்களும் சாலைகளால் இணைக்கப்பட்டன. அதனால் தான், இந்தியா இன்று பொருளாதாரத்தில்  வளர்ந்து கொண்டிருக்கிறது. 

vanathi--srinivas-3

வாஜ்பாயின் கனவு திட்டமான தங்க நாற்கரச் சாலை திட்டம், 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு, அதிவேகமெடுத்து, இன்று சாலைகளே இல்லாத பகுதிகளே இல்லை என்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. விமானங்கள் தரையிறங்கும் அளவுக்கு இந்தியாவில் இப்போது விரைவுச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.  சாலைகள் மட்டுமல்லாது,  ரயில்வே, விமானப் போக்குவரத்து என்று போக்குவரத்து உள்கட்டமைப்பில் இந்தியா உலகையே மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் வித்திட்ட வாஜ்பாய் அவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம். அவரின் தொலைநோக்குப் பார்வையும், உழைப்பும், அறிவாற்றலும், சமரசமில்லாத தேசப்பற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக அமைந்தன. இவற்றை நினைவு கூர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்துவது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்."என்று குறிப்பிட்டுள்ளார்.