நாடாளுமன்றத்திற்குள் திமுக நுழைந்த பிறகு தான், மாநில கட்சிகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டன- திருச்சி சிவா
எந்த நாட்டின் அரசியல் சாசனமும் 20 ஆண்டுகள் தாக்குபிடிக்காது என்று தாமஸ் ஜெபர்சன் சொன்ன பின்பும், 72 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசியல் சாசனம் தான் நமக்கு வழிகாட்டியாக உள்ளதாக திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் மாநிலங்களவை கூட்டத்தில் பேசிய அவர், "நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த பூலித்தேவன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், திலகர், வ.உ.சி, காந்தி, நேரு ஆகியோரை நான் நினைவுகூர்கிறேன். இந்தியாவின் ஜனநாயகத்தை உலகமே இன்று உற்றுநோக்க இரண்டு விஷயங்கள் தான் காரணம். ஒன்று அரசியல்சாசனம், மற்றொன்று நாடாளுமன்றம். எந்த அரசியல்சாசனமும் 20 ஆண்டுகளுக்கு மேல் தாக்குபிடிக்காது என்று தாமஸ் ஜெபர்சன் கூறியிருந்தார். ஆனால் நம் நாட்டின் அரசியல் சாசனம் 72 ஆண்டுகளை கடந்தும் இன்னும் நம் நாட்டுக்கே வழிகாட்டி வருகிறது. அதற்கு காரணம் அதில் உள்ள முக்கிய பிரிவுகள். உலகத்தில் ஜனநாயகம் முதன்முதலில் தோன்றியது நம் நாட்டில் தான். தமிழகத்தில் சோழர்கள் காலத்தில் குடவோலை முறை இருந்துள்ளது. அதாவது யார் ஆட்சி செய்வார்கள் என்பதை ஓலையில் எழுதிப்போட்டு, அதை ஒரு குழந்தையை வைத்து எடுக்க வைப்பார்கள். அதில் யார் பெயர் வருகிறதோ, அவர்கள் தான் ஆட்சி செய்வார்கள். தமிழகத்தில் அன்றே ஜனநாயகம் இருந்துள்ளது. இந்த நாடாளுமன்றம் என்பது வெறும் கட்டிடம் அல்ல, இது நம் உணர்வுகளில் கலந்த ஒன்று. புது நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாறினாலும், நிச்சயம் இந்த கட்டிடத்தை யாராலும் மறக்க முடியாது. நாடாளுமன்ற மத்திய மண்டபம் முன்பு நூலகமாக இருந்துள்ளது. அதன்பிறகு அது மாற்றப்பட்டது.
பின்னர் இங்கு வரலாற்று சிறப்புமிக்க வகையில், உச்சநீதிமன்றமே சில காலம் செயல்பட்டு இருக்கிறது. ஜூன் 1929ல் விடுதலைக்காக பகத்சிங் தரப்பில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் 2001ல் நம் ஜனநாயகத்தை வீழ்த்த தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதை எல்லாம் தாண்டி இந்த நாடாளுமன்றம் இன்னமும் செயல்படுகிறது. 20 ஆண்டு காலமாக இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினராக உள்ளேன். உலகின் மற்ற இடங்களை விட, இந்த நாடாளுமன்ற கட்டிடம் தான் எனக்கு மிகவும் படித்த இடம். 1952 மற்றும் 1957 என 2 நாடாளுமன்ற கூட்டங்களில் 700 சட்டங்கள் இங்கு இயற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்திற்குள் திமுக நுழைந்த பிறகு தான், மாநில கட்சிகளுக்கான கதவுகள் இங்கு திறக்கப்பட்டன. இதே மாநிலங்களவையில் எங்கள் தலைவர் அண்ணாவின் குரல் எப்படி ஒலித்தது என்பதை இன்றைக்கும் குறிப்புகளின் மூலம் புரிந்துக்கொள்ள முடியும். நாடு சுதந்திரம் அடைந்த தினத்தன்று நேரு இங்கு தான் சுதந்திர உரையை நிகழ்த்தினார். இவை எல்லாவற்றையும் நாம் ஒருபோதும் மறக்க முடியாது" என்று தெரிவித்தார்