சுனாமி கோரத்தாண்டவத்தின் 20வது ஆண்டு நினைவு தினம் இன்று!
சுனாமி கோரத்தாண்டவத்தின் 20வது ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மெரினாவில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். சுனாமியில் உயிர்நீத்தவர்களின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.இதேபோல் துக்கம் அனுசரித்து, கடலூர் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மீனவ கிராமங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கல்லறையில் மாலைகள் வைத்தும், மலர் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


