“அரசு ஊழியர்கள் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்” 4 ஆண்டுகளாக ஏமாற்றி வரும் திமுக - டிடிவி தினகரன்..!!

 
ttv ttv

  அண்டை மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்., 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் அரசு ஊழியர்கள் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் 309வது வாக்குறுதியாக வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

கவன ஈர்ப்பு, அடையாளம், பணி புறக்கணிப்பு, வேலைநிறுத்தம், சாலைமறியல் என அனைத்துவிதமான போராட்டங்கள் நடத்தியும், செவிசாய்க்காத திமுக அரசால், வேறுவழியின்றி 72 மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அளவிற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அரசு அமைத்த குழுவின் கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அக்குழு ஆலோசனை நடத்தியதாகவோ, அரசு ஊழியர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகவோ இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது போலத் தமிழக அரசு நாடகமாடி வருவது அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயலாகும்.

எனவே, இனியும் குழு அமைக்கிறோம், கருத்துக்களைக் கேட்கிறோம், ஆய்வு செய்கிறோம் எனக் காரணங்களை அடுக்கி காலத்தைத் தாழ்த்தாமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.,