10 ஆண்டு காலம் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியவர் பிரதமர் மோடி- டிடிவி தினகரன்
10 ஆண்டு காலம் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியவர் பிரதமர் மோடி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தேர்தலில் போட்டியிட நான் எதற்கும் அஞ்ச மாட்டேன், தேவைப்பட்டால் கூட்டணிக் கட்சி இல்லாது தனியாக கூட போட்டியிடுவேன். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை, நம் கட்சியினரை வெற்றி பெற வைப்பேன். 10 ஆண்டு காலம் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியவர் பிரதமர் மோடி. தவளையும் எலியும் சேர்ந்து அமைத்ததுதான் இந்தியா கூட்டணி. மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலை விட ஒரு படி மேலே சென்று நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியை முறித்து கொண்டு வெளியேறியுள்ளார். இந்தியா கூட்டணியில் கடைசியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே மிஞ்சுவார்.
அயோத்தி ராமர் கோவில் விழா மூலம் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு ஆதரவு கிடைத்துள்ளது என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும். ஆளுநரும், மத்திய அமைச்சர்களும் தான் தமிழ்நாட்டிற்கு பெரும் தலைவலியாக இருக்கிறார்கள். ஆளுநர் பொறுப்பின் முக்கியதுவத்தை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே அப்பதவிக்கு அழகு. நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பதற்காக பல கட்சிகளிடம் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.