காவல்நிலையத்துக்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை! திமுக அரசின் தோல்வி- டிடிவி தினகரன்

 
TTV STALIN TTV STALIN

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதாக இதுவரை 56 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை விபரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிகிச்சையில் உள்ளவர்கள் முழு உடல் நலத்துடன் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கின்றேன். காவல் நிலையம் பின்புறம் சாராய விற்பனை நடைபெற்றுள்ளது வேதனைக்குரிய விஷயம். தமிழகத்தில் கள்ளச்சாராய் இறப்புகள் ஏற்படாதவாறு முதல்வர் தடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு முதல்வர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் இதற்கு பொறுப்பேற்று இனிவரும் காலங்களில் இது இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கின்றேன் என கூற வேண்டும். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு காரணம் திமுக அரசுதான். இது திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் மற்றும் முதல்வரின் நடவடிக்கை பொறுத்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்படும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தான் சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. அப்போது கள்ளக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவரது தொகுதியில் அவருக்கு தெரியாமல் சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை” என்றார்.