ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவர்களுக்கு அரசுப் பணி வழங்குக- டிடிவி தினகரன்

 
ttv

தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

ttv dhinakaran

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் பிரபாகரன்,  அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கார்த்திக், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கருப்பாயூரணி கார்த்திக் என முதலிடம் பிடித்த மூன்று வீரர்களுக்கும்,  தீரத்துடன் களமாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், தங்களுக்கு வழங்கப்படும் கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்களுக்கு பதிலாக தங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் அரசுப்பணி வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை அரசு இந்த ஆண்டிலாவது பரிசீலனை செய்ய வேண்டும். 


அதே நேரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும்  ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை வளர்ப்போருக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் 373 வது தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதையும் இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். எனவே, தமிழர்களின் 
பாரம்பரிய விளையாட்டை உலகம் முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும் வகையிலும் அரசுப் பணி வழங்குவதோடு, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.