சசிகலாவின் புதிய கட்சியை பங்கமாக கலாய்த்த டிடிவி தினகரன்..! "திடீர் சாம்பார், திடீர் இட்லி.. அது போல திடீர் கட்சி..!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்த சசிகலா, அவரது மறைவுக்கு பிறகு நிஜ அரசியலுக்குள் நுழைந்து, 2016 ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார்.
அதன் பின்னர், கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது சசிகலாவை எதிர்த்து அன்றைய முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.
முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்க இருந்த வேளையில், சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றார். அவர் சிறை செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவித்து விட்டுச் சென்றார். 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அவர், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறிவந்தாலும் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்திய சசிகலா, பசும்பொன்னில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் புதிய களத்தை, புதிய கட்சியை ஆரம்பிக்கிறோம். இது திராவிட கட்சியாக அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் இந்தக் கட்சி செயல்படும். கட்சியின் கொடியை இங்கு அறிமுகம் செய்கிறேன். கொடியில், கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களுடன், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவங்கள் இடம் பெறும். கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன். இது மாற்றுக்கருத்து கிடையாது” எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அமமுக, அதிமுக தொண்டர்கள் 99 சதவிதம் பேர் ஒரு அணியில் இணைந்துவிட்டோம். மீதமுள்ள 1 சதவிகிதத்தினர் எதுவேண்டுமானாலும் செய்யலாம்.
திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர் கட்சி தொடங்கலாம். அம்மாவின் ஆட்சி அமைப்போம், கட்சியை ஒருங்கிணைப்போம் என்பவர்களின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது. 35 ஆண்டுகளாக எனக்கு மட்டுமே தெரிந்த சில நபர்களின் உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியத் தொடங்கியுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

