மூதாட்டி அடித்துக் கொலை- போலீசை செயலற்ற நிலையில் வைத்திருக்கும் திமுக அரசு: டிடிவி தினகரன்
நாமக்கல் அருகே தோட்டத்து இல்லத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையை செயலற்ற நிலையில் வைத்திருக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த குளத்துப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து இல்லத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் என மேற்கு மாவட்டங்களில் தோட்டத்து இல்லங்களில் வசிக்கும் வயதான முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவதும், அவரவர் இல்லங்களில் இருக்கும் நகை, பணம் திருட்டு போவதும் தொடர்கதையாகி வருவது காவல்துறையின் செயலற்ற திறனையும், அலட்சியப் போக்கையுமே வெளிப்படுத்துகிறது.
திருப்பூர் மற்றும் ஈரோடு கொலை வழக்கில் தொடர்புடையதாக கைதானவர்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற கொலை, கொள்ளைகளை தாங்களே அரங்கேற்றியதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில், ஏற்கனவே குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் யார்?, விசாரணை அதிகாரி திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கே இன்னமும் விடை கிடைக்காத நிலையில், தற்போது மீண்டும் அதே பாணியில் நாமக்கல் அருகே அரங்கேறியிருக்கும் சம்பவம், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் உண்மைக் குற்றவாளிகள் தானா? ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் இச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, மூதாட்டி கொலை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு இதுபோன்ற திட்டமிட்ட குற்றச்சம்பவங்கள் நிகழாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


