மீனவர்கள் ஜாமீனில் செல்ல ரூ.1 கோடி...மத்திய அரசுக்கு தினகரன் வேண்டுகோள்!!

 
ttv dhinakaran

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை ரூ.1 கோடியை செலுத்த உத்தரவிட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

fisher

கடந்த மாதம் 24ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள்,  தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.  இதையடுத்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 7ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.  இதைத்தொடர்ந்து நேற்று சிறைக் காவல் முடிந்து மீண்டும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 12 மீனவர்களை,  வருகின்ற மே 12ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்த நீதிபதி,  மீனவர்கள் ஜாமீன் செல்ல வேண்டுமென்றால் தலா ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.  இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tn

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், " இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை பிணையில் விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடியை செலுத்த உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.தமிழக மீனவர்களுக்கு எதிராக தொடரும் இலங்கையின் இத்தகைய அடாவடிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் படும் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் வாடும் இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.