பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்து- அலட்சியம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் வேதனை

 
ttv dhinakaran

பட்டாசு ஆலை ஏழைத் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Fire

இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 தொழிலாளர்கள்  உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. 

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்குவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

தற்போது விபத்து நடைபெற்றிருக்கும் செங்கமலப்பட்டியில் பட்டாசு உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் சுவடுகள் மறைவதற்குள் மீண்டும் ஒரு விபத்து நடந்திருப்பதும் அதில் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது.  

TTV Dhinakaran

விருதுநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளாலும், பலமுறை சுட்டிக்காட்டியும், அலட்சியம் காட்டும் அரசு நிர்வாகத்தினாலும் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 

எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழகத்தில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய ஆய்வை மேற்கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதோடு, அபாயகரமான பணி என தெரிந்தும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் அப்பாவி தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.