இலங்கை கடற்கொள்ளையரின் தாக்குதல் - தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பெரும் பாதிப்பு என தினகரன் வேதனை!!

 
ttv dhinakaran

தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். 

fisher

நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள்  தாக்கியதுடன் அவரின் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மூன்று பேர் மீன்பிடிக்க சென்ற நிலையில்,  மற்றொரு படகில் வந்த மூன்று கடல் கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கியதுடன் , அவர்களை கடலில் தூக்கி வீசிவிட்டு,  200 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி,  டீசல் பேரல்  உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதை தொடர்ந்து அருகில் மீன்பிடித்து கொண்டவர்களின் உதவியுடன் ஆறுகாட்டுத்துறை கடற் கரைக்கு திரும்பிய 3 மீனவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

TTV Dhinakaran
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "ஒரு பக்கம் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்; இன்னொருபுறம் புதிதாக கிளம்பியிருக்கிற இலங்கை கடற்கொள்ளையரின் தாக்குதல் என தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். நம்முடைய மீனவர்களிடமிருந்து பிடித்த படகுகளை ஏலம் விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட துடிக்கிறது இலங்கை அரசு. இனியும் மத்திய - மாநில அரசுகள் மெத்தனமாக இப்பிரச்சனையைக் கையாள்வது சரியானதுதானா? தமிழக மீனவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு வருவது இந்தியாவிற்கே அவமானமில்லையா? இதனை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டிய கடமை  மத்திய அரசுக்கு இருக்கிறது. வெறும் கடிதம் எழுதுவதோடு நிறுத்திவிடாமல் மத்திய அரசை வலியுறுத்தி அதனைச் செய்திட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.