மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது கொலை முயற்சி- டிடிவி தினகரன் கண்டனம்
அரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சித்த சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி - சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுப்பதே ஒரே தீர்வாக அமையும். அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற மணல் கடத்தலை தடுக்க முற்பட்ட காவலர்கள் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளை தொடர்பான பொதுமக்களின் புகார்களை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே, மணல் கொள்ளையை தடுக்க முயலும் காவலர்களையே கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ திரு.லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, சிவகங்கை, அரியலூர் என பல்வேறு மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, காவலர்களை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, இனிவரும் காலங்களில் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.