தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
வேலூரை தொடர்ந்து நீலகிரியிலும் பள்ளி செல்லும் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான அவலம் அரங்கேறியுள்ள நிலையில், பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக தொடர்ந்து நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கத் தவறிய திமுக அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை கடத்திச் சென்று 7 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வேலூர் அருகே 13 வயது சிறுமி போதைக் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி அருகே நடைபெற்றிருக்கும் மற்றொரு பாலியல் கொடுமைச் சம்பவம் தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதையே வெளிப்படுத்துகிறது.
தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்ககத்தை கட்டுப்படுத்தவோ, அடியோடு ஒழிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, போதைப் பொருட்களை தமிழக எல்லைக்குள் வரவிடாமல் தடுப்பதற்காக தற்போது மேற்கொள்ளும் ஒத்திகை கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல அமைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, வேலூர் மற்றும் நீலகிரியில் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரக் கும்பல் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இது போன்ற குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை இனியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.