இந்து சமய அறநிலையத்துறை இயங்குகிறதா ? உறங்குகிறதா ? - டிடிவி தினகரன் கேள்வி
Mar 20, 2025, 22:03 IST1742488425647
பழனி முருகன் கோயிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இயங்குகிறதா ? உறங்குகிறதா ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலைத் தொடர்ந்து பழனி முருகன் கோயிலிலும் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் முக்கியமான திருக்கோயில்களில், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைத்திருக்கும் இந்துசமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போதும் அதனை தடுப்பதற்கான வழிகளை ஆராயாமல், தட்டிக் கழிப்பதிலும், புதுப்புது காரணங்களை புனைவதிலுமே முழு கவனம் செலுத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் மெத்தனப்போக்கே இதுவரையிலான மூன்று உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என சக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருக்கோயில்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


