இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு முடிவு கட்டுவது எப்போது ? - டிடிவி தினகரன் கேள்வி
எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அராஜகத்திற்கும் முடிவு கட்டுவது எப்போது ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, அம்மீனவர்களின் 3 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இன்று மீண்டும் 12 மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் அத்துமீறல் கடும் கண்டனத்திற்குரியது.
எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது - இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அராஜகத்திற்கும் முடிவு கட்டுவது எப்போது ?
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 12, 2024
பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, அம்மீனவர்களின்…
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அராஜகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பாக இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.