பொதுமக்களை அகதிகளாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? - டிடிவி தினகரன் கேள்வி

 
ttv ttv

ஆக்கிரமிப்பு எனும் பெயரில் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிப்பு எனும் பெயரில் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? - தச்சு தொழிலாளியின் தற்கொலைக்கு நீதிகேட்டு போராடிய பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்திருப்பதாக கூறி ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதில், மனமுடைந்த தச்சுத் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.


தச்சுத் தொழிலாளியின் தற்கொலைக்கு நீதி கோரியும், குடியிருப்புகளை அகற்றும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருப்பதோடு அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு எந்தவித மாற்று ஏற்பாடுகளையும் செய்துத் தராமலும், முன்னறிவிப்பு இல்லாமலும் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை வெளியேற்றத் துடிக்கும் திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, ஆக்கிரமிப்பு எனும் பெயரில் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, அரசு நிர்வாகத்தின் நடவடிக்கையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.