அமமுக தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்பு - டிடிவி தினகரன் பேட்டி

 
ttv

அமமுக தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தரையில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அண்ணாமலையில் விமர்சனம் காரணமாக பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டது அதிமுக. இதன் காரணமாக பாஜக மாற்று கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. பாஜக முடிவை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் வருகிற நாடாளுமன்ற தேர்தலை டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து சந்திக்கவுள்ளதாக கூறியிருந்தார். 

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய டிடிவி தினகரன், அமமுக தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்படும். ஒரு கட்சி வளருவதற்காக, மற்ற கட்சியை வளர விடாமல் தடுக்கின்றன. தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் தலை தூக்கி வருகிறது. நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து சந்திக்கவுள்ளதாக டிடிவி தினகரன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.