எழுச்சி மாநாடு அல்ல, எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி மாநாடு - டிடிவி தினகரன் பேட்டி!

 
ttv

மதுரையில் நேற்று நடைபெற்றது அதிமுக எழுச்சி மாநாடு அல்ல, எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி மாநாடு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 

தஞ்சாவூரில் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மதுரையில் நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், மதுரையில் நேற்று நடந்தது எழுச்சி மாநாடு அல்ல, எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி மாநாடு என்று கூறினார். நேற்று நடந்த மாநாட்டில் 20 லட்சம் பேரா பங்கேற்றனர் ? வெறும் இரண்டரை லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர் என்றார். 

ttv

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், வருகிற நாடாளுமன்ற தேர்தலை அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து சந்திக்கவுள்ளோம். கூட்டணி அமைத்தால் அது தேசிய கட்சிகளுடன் தான் கூட்டணி அமைப்போம். ஒருவேளை கூட்டணி இல்லையென்றாலும் தமிழகம் முழுவதும் நாங்கள் தனித்து போட்டியிட தயாராக உள்ளோம். பாஜகவுடன் எனக்கு எப்போதுமே உறவு இருந்தது கிடையாது. நண்பர்கள் இருக்கிறார்கள், அவ்வளவு தான். இவ்வாறு கூறினார்.